Sunday, February 8, 2009

"நீ ரொம்ப நல்லவன்டா"

பேருந்து பயணத்தின்போது எப்போதும்
சண்டையிடுபவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
நடத்துனருக்காக பயணியிடம், பயணிகளுக்காக
நடத்துனரிடம், இப்படி ஒரு காரணம் அகப்படும்.
உன்னுடன் பயணிக்கையில் கடுஞ்சொல் கூறுவோரிடம்கூட
மெலிதான புன்னகையுடன் "ஸாரி" என்கிறேன்.
"ரொம்ப பொறுமைசாலிடா நீ" என கூறுகிறாய்.

நண்பர்கள் குழாமில் எப்போதும்
செலவு செய்பவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
உன்னுடன் உணவருந்துகையில் இரண்டு ரூபாய்
டிப்ஸ் வைக்கிறேன் நான்.
"ரொம்ப சிக்கனம்" என்று பெருமிதத்துடன்
இன்னொரு இரண்டு ரூபாய் டிப்ஸ் வைக்கிறாய் .

நினைவு தெரிந்து கோயிலுக்கு
செல்லாதவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
உன்னுடன் வரும்போது என் பெயரில் அர்ச்சனை செய்யும் உன்னை அதிசயித்து பார்க்க பக்தியுடன் பார்ப்பதாக நினைத்து
"நீ ரொம்ப நல்லவன்டா " என்று விபூதி இடுகின்றாய் எனக்கு.

WWF மல்யுத்தத்தை எப்போதும்
தவறவிடாமல் பார்ப்பவனாகவே இருந்திருக்கிறேன்
நான்.
உன்னுடன் சினிமா பார்க்கையில் மென்சோகக் காட்சிகளுக்கு
கண்ணீர் சிந்தியதைக் கண்டு
"நான் ரொம்ப லக்கிடா" என்று கண் துடைத்து
என் தோள் சாய்ந்து அழுகிறாய்.

உன்னுடனான என் சுபாவம் குறித்து
நண்பர்களின் கேலிக்கு அஞ்சியதில்லை
நான்.
வாழ்நாள் முழுக்க இப்படியே இருந்து விடுவோமோ
என்று கவலைப்படத் தொடங்குகின்றேன் இப்போது.

4 comments:

லோயர் said...

நல்லா இருக்கு

மற்றும் ஒரு காதலன் said...

காதல்ன்னா சும்மா இல்லை..

Cable சங்கர் said...

இது கவிதையா கட்டுரையா என்று தெரியாவிட்டாலும் நல்லாயிருக்கு.

யூர்கன் க்ருகியர் said...

She is lucky ... keep going as it is!

Post a Comment